கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாட்டில் கொரோனா தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், சிறைச்சாலை கொரோனா கொத்தணி மூலம் இதுவரை மூவாயிரத்து 111 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஐந்து கைதிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் அரசியற் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரன்.
சின்னையா சிவரூபன், சி.ஐ. இரகுபதி சர்மா, எட்வேட் சாம் சிவலிங்கம், தங்கவேல் சிவகுமார், நாகலிங்கம் மதனசேகர், தேவசகாயம் உதயகுமார், குலசிங்கம் குலேந்திரன், றுபட்ஷன் யதுஷன், சேவியர் ஜோண்ஷன் டட்லி, தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ், விநாயகமூர்த்தி நெஜிலன், இரத்தினம் கிருஷ்ணராஜ், சின்னமணி தனேஸ்வரன், ஞானசேகரம் ராசமதன் ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்கும் முகமாக சில பொறிமுறைகளுக்கு ஊடாக அரசாங்கம் ஆறாயிரம் கைதிகளை விடுவித்துள்ளது.
எனினும், அதில் ஒரு தமிழ் அரசியற்கைதியேனும் உள்வாங்கப்படவில்லை. இதனால், அரசியற் கைதிகளின் பெற்றோர், உறிவினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.