நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
சின்னத்திரை நடிகை சித்ராபூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து வருகிறார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், ஹேம்நாத் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கியமாக சித்ராவுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததா? என்று விசாரிக்கப்பட்டது.
மேலும் சித்ரா தங்கியிருந்த விடுதியின் ஊழியர்கள், சித்ராவுடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என இதுவரை 16 பேரிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளார்.
4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்து இருக்கிறார். இந்த விசாரணை அறிக்கையை வருகிற திங்கட்கிழமை பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சனத்திடம் வழங்க ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ முடிவு செய்து உள்ளார்.
இந்த அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.