21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகும் இளம்பெண்

220 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

இதற்கிடையில், தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, மாநகராட்சிக்கு மேயரை தேர்வு செய்தவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டில் கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு பயின்றுவரும் ஆர்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடவன்முகல் தொகுதியில் வெற்றிபெற்றார்.

21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் இளம்வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற உள்ளார். கல்லூரி மாணவியான ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மேயராக பொறுப்பேற்றால் இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் பதவியடையும் பெருமையை ஆர்யா பெறுவார் என்பது கூடுதல் சிறப்பு.