உணவுப்பொருள்களின் விலை அடுத்தாண்டே கட்டுப்பாட்டுக்குள் – பந்துல

216 0

கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தால் பூகோள மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து எம்மால் மாத்திரம் உடன் மீள முடியாது. மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தற்போது அதிகரித்துள்ளமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

எனவே, அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் சுகாதார மற்றும் பொருளாதார மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல செல்வந்த நாடுகள் எம்மைக் காட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்திலிருந்து இலங்கை மட்டும் உடன் விடுபட முடியாது.

2ஆம் உலக மகா யுத்தத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படவில்லை. ஆனால், பொருளாதார மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகம் என எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டே அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்க முடியும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.

வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் தீர்மானங்கள் இனம், மதம் மற்றும் மொழி ஆகிய காரணிகளைக் கொண்டு எடுக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் தீர்மானத்தை சுகாதாரக் குழுவினரே எடுத்தனர். இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.