இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ், யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், முஸ்லிம் வர்த்தகர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் ஆகியோர் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைக்கு தமிழ் மக்களின் ஆதரவை உறுதியாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் சார்பாக மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) கவனீர்ப்பின் முக்கிய நோக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொவிட் வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.