யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

241 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் கருத்துரைத்த அரசாங்க அதிபர், “தற்போதைய நிலைமையில் எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக உடுவில், தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அத்தோடு, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் தொற்றுக் எண்ணிக்கை சற்று அதிகமாகக் காணப்படுகின்றது

நேற்றைய நிலைவரத்தின்படி இரண்டாயிரத்து 275 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உடுவில் பிரதேசத்தில் 406 குடும்பங்களும், தெல்லிப்பளையில் 350 குடும்பங்களும் கோப்பாயில் 260 குடும்பங்களும் சங்கானையில் 163 குடும்பங்களும் தனிமைப்படுத்தலில் உள்ளன.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவு ஊடாக வழங்கப்படுகின்றன.

இந்த சூழலில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் கவனம் எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால், எதிர்காலத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.