ஆறு உற்பத்திப் பொருட்களுக்கு ஜனவரி முதல் தடை!

224 0

ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தலின் நகல் மேலதிக ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதன் கீழ், காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லிலீற்றரை விட குறைந்த கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஆறு உற்பத்திகள் தடை செய்யப்படவுள்ளன.

இந்தத் தடையை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தக்கோரி தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததாக அமைச்சர் கூறினார். இதற்காக குறித்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண காலம் ஒன்றை வழங்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

அதேவேளை, அரசியல்வாதிகளுக்கு மண், மணல், கருங்கல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை என சுற்றாடல் அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் பற்றிய கேள்விக்கு, மக்கள் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறும் அரசியல்வாதிகளுக்கு அத்தகைய காரியங்களுக்காக விண்ணப்பிக்கக்கூடிய தார்மீக உரிமை கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.