பிறந்த 30 குழந்தைகளை விற்றதாக கூறப்படும் நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இணையவழி மூலமாக விளம்பரத்தை வெளியிட்டு இடைதரகர் மற்றும் துன்பத்திற்குள்ளாகி இருக்கும் பெண்களுடன் ஒருவகையான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இந்த சந்தேக நபர் பேபி பாம் நடவடிக்கையில் ஈடுப்பட்டமை தெரிய வந்திருப்பதாக ஊடக பேச்சாளர் கூறினார்.
பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசாரணைக்கு மத்தியில் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் 47 வயதான நபர் கடந்த 21ஆம் திகதி இரவு மாத்தளை உக்குவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு இந்த சந்தேக நபர் பேபி பாமை மொறட்டுவ பிரதேசத்தில் 2 இடங்களில் நடத்தி வந்திருப்பதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களிடம் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னர் அந்த குழந்தைகளை 3 ஆம் தரப்பினருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.
வெளிநாடுகளில் இவ்வாறான பேபி பாம் என்ற குழந்தைகள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர்; அலுவலகம் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையுடன் தொடர்புப்பட்ட 12 கர்ப்பிணி தாய்மார்களின் தகவல்களை பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த 12 பெண்களில் 5 பெண்கள் கர்ப்பமடைந்த வேளையில் குழந்தைகளை 3 ஆம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளதுடன், மேலும் 3 குழந்தைகளுடன் தாய்மார் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கர்ப்பிணி தாய்மார் பாதுகாப்புக்கு உட்பட்ட வகையில் இருப்பதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை தண்டனை கோவைச்சட்டத்தின் கீழ் குற்றச்செயலாகும் என்றும் குறிப்பிட்ட அவர், சந்தேக நபர் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.