கடந்த மாதம் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது ஒளிப்படத்தையும் சொற்களையும் பிரசுரித்தமைக்காக யாழ்ப்பாண பொலிஸார் உதயன் பத்திரிகை மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராஜபக்ச அரசு தமிழ் மக்களின் மீதான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகம் மீண்டும் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. பூதத்துக்கு தேவதை வேசம் போட்டு ராஜபக்ச அரசை ஆட்சி பீடம் ஏற்றியவர்கள் இன்னும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரளவில் இருந்தால் மட்டும் காணாது. அதை செயற்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிகைத்துறை அடக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
வடபகுதி தமிழ் மக்களின் போர்க் கால துன்பங்களை சவால்களுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் எடுத்துரைத்த உதயன் பத்திரிகை மீது மீண்டும் அடக்குமுறையை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழர்களின் நியாயமான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். அது அவர்களின் பத்திரிகை சுதந்திரம்.
தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பது தவறு எனில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ பேர் அவரின் பெயரை உச்சரிக்கின்றார்கள். ஏன் வழக்குத் தாக்கல் செய்த பொலிஸார் கூட அவரின் பெயரை உச்சரித்தே வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். அனைவரையும் கைது செய்ய முடியுமா? 2009ம் ஆண்டு புலிகளை அழித்து விட்டதாகக் கூறி வெற்றிக் கொண்டாட்டம் நடத்திய அரசு ஏன் இன்று அவர்களை நினைத்து அச்சம் கொள்ள வேண்டும்? ராஜபக்ச அரசின் மனதில் குற்ற உணர்ச்சி உள்ளது. அதை மறைப்பதற்காக வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி பத்திரிகைத் துறையை அடக்கி ஒடுக்க நினைப்பது எப்பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது, என்றுள்ளது.