பூந்தமல்லி கிளை சிறையில் இங்கிலாந்து நாட்டு கைதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். புதிய வகை கொரோனா பாதிப்பால் அவர் இறந்தாரா? என சக கைதிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி பகுதியில் கடந்த 5ந் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த வெளிநாட்டுக்காரர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட் (வயது 68) என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி நீண்ட நாட்களாக தமிழகத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
அவரை தர்மபுரி போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர்.
நேற்று காலை சிறையில் இருந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிறை வார்டன் மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டேவிட் வில்லியம்ஸ் பாண்ட் ஏற்னவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார், கைதி டேவிட் வில்லியம்ஸ் பாண்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், லண்டனை சேர்ந்தவர் என்பதால் அவர் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தாரா? என சக கைதிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. அவரை சிறையில் அடைக்கும் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. மேலும் அவர் பல மாதங்களாக தமிழகத்திலேயே தங்கி இருப்பதால் அவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கைதிகளிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் அவருடன் சிறையில் இருந்த அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு கைதி டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், உடல்நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
அவரது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும். இது குறித்து இங்கிலாந்து தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.