பொல்கஹவெலயில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – 2 பிரதேசங்கள் முடக்கம்!

224 0

சுமார் மூன்றாயிரம் பேர் பணி புரியும் பாணந்துறை ஹொரணை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிலையம் ஒனறில் இதுவரை 87 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த ஆடை உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நத்தார் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கொழும்பில் இருந்து ஹட்டன் வந்த இரண்டு குழந்தைகளின் தாய்க்கு மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தாய் தெஹிவளை பிரதேசத்திலும், குறித்த தந்தை முகத்துவாரம் பிரதேசத்திலும் பணி புரிந்து வந்த நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு வரும் போது கினிகத்தேன கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை மாநகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட ஹிக்கொல்ல கிராமத்தில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 தொற்றாளர்களுள் மாத்தளை மாநகர சபை ஊழியர்கள் நான்கு பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதில் மூவர் நேற்று நகர சபைக்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொல்கஹவெல பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட பந்தாவ மற்றும் மடலகம ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இரு பிரதேசங்கனை தனிமைப்படுத்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி பந்தாவ கிராமத்தில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய சுமார் 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.