திருகோணமலையில் ஆறு நாட்களில் 67 கொரோனா தொற்றாளர்கள்!

213 0

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் இன்று (23) வரை 846 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நகரப் பகுதியில் 43 பேரும், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 7 பேரும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 12 பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 14 பேரும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு, சேருவில பிரதேச செயலாளர் பிரிவு, கோமரங்கடவெல செயலாளர் பிரிவு ஆகியவற்றில் தலா ஒருவரும் என  மொத்தமாக 67 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கும், கொரோனா தடுப்பு தேசிய பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தில் முருகாபுரி, துளசிபுரம், அபேபுர ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினரினால் தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று கொத்தணி கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களைத் தவிர்த்து பொது மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் மாகாண சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.