மட்டக்களப்பு மாவட்டத்தில் நத்தார் ஆராதனைகளில் பங்கேற்க 50 பேருக்கு மட்டும் அனுமதி

207 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவாலயங்களில் இடம்பெறும்  நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ளலாம் என கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க. கருணாகரன் தெரிவித்தார்.

 

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசரக் கூட்டம் நேற்று (22) செவ்வாய்க்கிழமை (22) மாலை அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் அறிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தேவாலயங்களில் நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளின் போது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கிறிஸ்தவ பாதிரிமார்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே இவ் வேண்டுகோளின் அடிப்படையில் தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ளலாம்.

அங்கு வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும் எனவும் அவ்வாறு சுகாதார நடைமுறை களை அலட்சியம் செய்வோரை அவதானிக்க பொலிஸ் விசேட குழுவினருடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப் பட்டுள்ளனர். அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

பண்டிகைக் காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசி வரை காத்திருக்காது மக்கள் நெரிசல் ஏற்படாத வகையில் செயல்படுவது அவசியமாகும். கடை உரிமையாளர்கள் கவனமாக வாடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானதாக கருதப்படுகின்றது.

நத்தார் பண்டிகை அதனைத் தொடர்ந்து புத்தாண்டு அதன்பின் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகைக் காலமா கையால் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்படுமாறும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றிலிருந்து மக்களை மிகவும் அவதானத்துடன் செயல்படும் படியும் அரசாஙக அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.