நுவரெலியா மாவட்டத்தில் 334பேருக்கு கொரோனா!

270 0

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 334பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இமேஷ் பிரதாபசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “பிரதேச சபை தவிசாளரிடம் இரண்டாவது தடவையும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது அவர் எவ்வாறு செயற்பட்டுள்ளார் என்பதனை ஆராய்ந்த பின்னரே பிரமுகர்களை தனிமைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கபடும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரதேச சபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று அரசாங்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பின்றி நுவரெலியா பகுதிகளுக்கு சுற்றுலா வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை 7ஆயிரத்து 715 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 334 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.