பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

243 0

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, குறித்த ஆணைக்குழுவைப் போன்ற மாற்று அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு அதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் விரும்புகிறது என்றும் அதற்கான பெயர்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

இருப்பினும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்து இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் நிதி மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக தேவைப்பட்டால் சட்ட மாற்றங்கள் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தேவையான திட்டங்களை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் பல சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.