இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் ரத்து – மத்திய அரசு அதிரடி

229 0

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு நாளை முதல் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன.
ஆஸ்திரியா, இத்தாலி,பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, துருக்கி என பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து வகை விமானங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதிய வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டே இந்த விமான போக்குவரத்து தடை அமல்படுத்தப்படுகிறது.

இந்த தடை உத்தரவு நாளை (டிசம்பர் 22) இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.