அமெரிக்க அரசு மூடலை தவிர்ப்பதற்காக 2 நாள் பட்ஜெட்டில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார்.
அமெரிக்காவின் மத்திய அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி, இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் அமெரிக்காவில் மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டிருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக 2 நாள் பட்ஜெட்டில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்து போட்டார். இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முழு அளவிலான பட்ஜெட் மீது விவாதங்கள் நடைபெறும் என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் இருந்து சீன பங்குகளை வெளியேற்றுவதற்கு வகை செய்யும் மசோதாவிலும் டிரம்ப் கையெழுத்து போட்டார். அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் நிதி தணிக்கைகளை மறு ஆய்வு செய்ய முடியாத பட்சத்தில் சீன நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தைகளில் இருந்து வெளியேற்ற இந்த சட்டம் வகை செய்துள்ளது. இதனால் சீனாவின் அலிபாபா குழும நிறுவனங்கள் பாதிப்புக்கு ஆளாகும்.
டிரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் போக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.