அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்காக போலி இணையதளங்கள்

235 0

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்துக்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி இணையதளங்களை அமெரிக்க அதிகாரிகள் முடக்கி விட்டனர்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை வைத்து மோசடி செய்யும் வகையில் அமெரிக்காவில் 2 இணையதளங்கள் இயங்கி வருவதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்துக்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த இந்த போலி இணையதளங்களை அமெரிக்க அதிகாரிகள் முடக்கி விட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போது, முடக்கப்பட்ட இணையதளங்களில் ஒன்று, கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த 8-ந்தேதி பதிவு செய்யப்பட்டது எனவும், அது பற்றிய தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இல்லை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல மற்றொரு இணையதளம் நைஜீரியாவை சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் இதுபோன்ற இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மேரிலாந்து அட்டார்னி ராபர்ட் ஹர் கூறியுள்ளார்.