கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

216 0

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, கூட்டமைப்பினால் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கொரோனாவால் இறக்கின்றவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அற்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவான தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், அரசியல் யாப்புக்கான தங்களது பரிந்துரைகளை விரைவாக முன்வைப்பதற்கும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.