தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாட நூல்களில் தரம் 6, 7, 8, 9, 10 வரலாறு பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றில் அண்மையில் கருத்தொன்று முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், தமிழ் வரலாற்று பாடத்தில், தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு, மிக விரைவில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று கூறினார்.
குறித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய, மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் விசேட குழுவை அமைத்து, அக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.