தலிபான் பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த அமெரிக்க தலைமை தளபதி

235 0

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஆனாலும், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவின் உதவியுடன் தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசு – தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்க படைகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க படையினர் வெளியேறிவருவதால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் மும்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத பயணமாக கத்தார் நாட்டிற்கு சென்றார்.
அங்கு தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளை ஜெனரல் மார்க் ரகசியமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலை குறைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஹிலானியை சந்தித்த ஜெனரல் மார்க் மில்லி தலிபான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தலிபான் பயங்கரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க மும்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.