இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடமும் ஏனைய துறையினரிடமும் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
முதலில் அமைச்சரவைக்கும் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பித்து, பாதகமான விடயங்கள் காணப்படுமெனின் அவற்றை நீக்கியதன் பின்னர், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றிலேயே அரசாங்கம் கைச்சாத்திடும்.
அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவுடன் மட்டுமன்றி பொருளாதார ரீதியில் வலுவான பொருளாதார ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சகல நாடுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக சில தரப்பினர் மக்களை தவறான வழியில் வழிநடத்தக்கூடிய கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
பாதுகாப்பு தொடர்பாகவும் மக்களின் நலன்கள் தொடர்பாகவும் செயற்படும் அனைவரும் இவ்விடயத்தில் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்பானது கலந்துரையாடல் மட்டத்திலும், திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் நிலையிலும் தற்போது காணப்படுகின்றது.
அது தொடர்பாக எந்தவொரு இணக்கங்களும் இன்னும் அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.
வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துதல், புதிய அரசியலமைப்பினை உருவாக்குதல் மற்றும் புதிய சட்டங்களை ஏற்படுத்தல் ஆகிய சகல விடயங்களிலும் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதுடன், நாட்டிலுள்ள கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டே அரசாங்கம் செயற்படும்.
நாட்டின் பாதுகாப்பை அரசியல் இலாபம் மற்றும் எதிர்கால அதிகாரத்திற்காக பயன்படுத்தினால், எதிர்காலத்தில் மீண்டுமொரு துயரத்தை அனைவரும் சந்திக்க நேரும்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விமர்சனங்கள் மிக முக்கியமானவை என்பதோடு மிகச்சிறந்த எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் மிகவும் அத்தியாவசியமானது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் பொறுப்புக்களை மிக நேர்மையாக உயரிய மட்டத்தில் ஆற்றுவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவதன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைய இடமளிக்கப்படாது.
புதிய தொழில்நுட்பங்களுடன் எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய இணையவழிக் குற்றங்கள் போன்ற நிலைமைகளையும் எதிர்நோக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான பயிற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.