அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை கையேற்று, அவற்றை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையங்களாக அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் மீளாய்வுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான நிதியினை சுகாதார அமைச்சினூடாக ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலதிக செலவுகளை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றினூடாக பெற்றுக்கொள்ளவும் இன்றைய மீளாய்வுக்கூட்டத்தின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் 500 தொடக்கம் 600 வரையான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்குரிய நிலையங்களை விரைவாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.