கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம்

218 0

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 3 குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீ பரவியமை தொடர்பில் நிர்வாகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

மின் பொறியியலாளர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோர் நேற்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன், இன்றும் இரசாயன பகுப்பாய்வாளரினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில், தீயினால் ஆவணங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நிலைமையைக் கருத்திற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும்  நீதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.