இலங்கை மருத்துவ சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை கோரும் ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சுகாதார அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா உட்பட, புதிய தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நியமிப்பதை எதிர்த்து மூன்று உறுப்பினர்கள் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு நேற்று (திங்கட்கிழமை) நீதியரசர்கள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சுகாதார அமைச்சர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே, மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ், உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அல்லது நீக்க சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும் இதை சட்டத்தின் முன் சவால் செய்ய முடியாது என்றும் கூறினார்.
மனுவை விசாரிக்க நியாயமான சட்டபூர்வமான எந்த அடிப்படையும் இல்லை என்றும் அழைப்பாணை வழங்காமல் குறித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தார்.
குறித்த பரிசீலனையை கருத்திற்கொண்ட நீதியரசர்கள், குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனையை டிசம்பர் 18 எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.