இலங்கையில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச் செயல்களைத் தடுக்கும் ஐநா குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிஐடி என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அதிகளவான சித்திரவதைகளை மேற்கொள்கின்றனர் என ஐநாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு ஐந்தாவது தடவையாக நடாத்திய மீளாய்வுக் குழுக் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு பரிந்துரைத்துள்ளது.
அது மாத்திரமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என கூறி புனர்வாழ்வு வழங்கியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பில் வைத்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் உட்பட சித்திரவதைகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை உடனடியாக அமைக்குமாறும் ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
கைதுசெய்யப்படும் நபர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் பதிவுசெய்யாது முதல் சில மணி நேரங்கள் தடுத்து வைத்திருப்பது, நீதவான் முன்னிலையில் நிறுத்தாது தடுத்து வைத்திருப்பதன் ஊடாக பொலிசார் சித்திரவதைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்வதாக ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு குற்றம்சாட்டியுள்ளது.
வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்பில் நீதவான்களால் விசாணைக்கு உட்படுத்தாமை சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு பொலிசார் விடுக்கும் கோரிக்கைக்கு எந்தவித விசாரணையும் இன்றி நீதிமன்றினால் அனுமதி வழங்கப்படுகின்றமை ஆகிய விடயங்களும் சித்திரவதைகள் தடையின்றி தொடர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா வின் சித்ததிரவதைகளுக்கு எதிரான குழுவின் 51 ஆவது கூட்டத்தொடரின் போது சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே ஐ.நா குழு 14 பக்க அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை செய்றபாட்டாளர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச பொது அமைப்புக்கள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட தகவல்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா அரச தரப்பினாலும் வழங்கப்பட்ட அறிக்கைகளை மையப்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவினால் சித்திரவதைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அரசாங்கம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஜெனீவாவிற்கு அனுப்பியிருந்த 11 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினால் வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என ஐ.நா குழு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ் 2008 முதல் 2009 யூன் மாதம் வரை சீ.ஐ.டி மற்றும் ரீ.ஐ.டி ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்த போது குறித்த பொலிஸ் பிரிவினரால் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிசிர மெண்டிஸ் பதிலளிக்காது மௌனம் காத்தமை கவலைக்குரிய விடயம் என்றும் ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸோ அல்லது வேறு எவருமோ இரண்டு நாள் அமர்வுகளிலும் வழங்கிய பதில்களிலும், அதற்குப் பின்னரும் அரசாங்கத்தினால் எழுத்துமூலம் வழங்கிய பதில்களிலும் உரிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் தற்போதைய அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சித்திரவதைகளை தடுப்பதற்கான யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு குற்றம்சாட்டியுள்ளது.
சட்ட பாதுகாப்பு பலவந்தமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை தடுத்தல், சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது, கடந்தகால குற்றச்செயல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூகூறல் ஆகியவற்றை நிறைவேற்ற சிறீலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது.