சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோல்கள் உலகம் முழுக்க சுமார் 5 கோடி பேர் வாங்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேமிங் உலகில் பல்வேறு சாதனங்களை வெளியிடுவதில் பிரபலமான சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களின் விற்பனையில் புதிய மைல் கல் சாதனை புரிந்திருக்கிறது.
அதன் படி சோனி நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 5 கோடி பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிளே ஸ்டேஷன் 4, சோனி நிறுவன வரலாற்றில் வேகமாக விற்பனையாகும் கேமிங் கன்சோலாக இருக்கிறது.
இதோடு உலகின் அதிகம் விற்பனையாகியிருக்கும் கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 4 இருக்கிறது. இரண்டாம் இடத்தில் மைக்ரோசாப்டின் எக்ஸ் பாக்ஸ் ஒன் இருக்கிறது. உலகம் முழுக்க இந்த கேமிங் கன்சோல்களின் விற்பனை எண்ணிக்கை சுமார் 3 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. மூன்றாம் இடத்தில் நின்டென்டோவின் Wii U இருக்கிறது. இந்த கேமிங் கன்சோல்கள் உலகம் முழுக்க 1.3 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சோனி நிறுவனத்தை பொருத்த வரை இந்த கேமிங் கன்சோல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே முதலிடத்தில் இருந்து வந்தது. அவ்வப்போது பிளே ஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் இடையே பலத்த போட்டி இருந்த போதும் சோனி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.