இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் மரணபீதியில் ஓலமிட்டனர்.
பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டினர்,
அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி, கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.