வெடுக்குநாரி நிர்வாக உறுப்பினர் சகலருக்கும் பிடியாணை

236 0

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்யவேண்டும் என்றும். தொல்பொருள்கள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்றும் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 6 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அநேகமான வழக்குகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது.

அந்தவகையில் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதத்துக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் மற்றும் பொலிசார் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகளால்  நீதி மன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட, நிலையில்  டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு (நேற்றுமுன்தினம்) அந்த வழக்கு அழைக்கப்பட்டது.

எனினும், வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் தமக்கு  தெரியப்படுத்தவில்லை எனத் தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் இதனால் அன்றையதினம் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை எனத் தெரிவித்தனர்.

எனினும், ஆலய நிர்வாகத்தினர், நீதிமன்றத்தில்  ஆஜராகமையால் அவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.