ஜெயலலிதா சமாதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

343 0

201612080505553060_1000-of-people-comming-to-see-jayalalithaa-formerly-bustling_secvpfதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்ததால் ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது. பலர் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்- அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த 5-ந் தேதி காலமானார்.

75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது.

மரணம் அடைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை வைக்கப்பட்டது. பின்னர் மாலை 4.17 மணி அளவில் ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று சிலாப் கற்கள் போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. கொடியும் நடப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெரும்பாலானவர்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இதையடுத்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் மெரினா கடற்கரையிலேயே இரவு தங்கினர்.

பல்வேறு ஊர்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் பஸ்கள், வேன்கள், கார்கள், ரெயில்கள் மூலம் அலை, அலையாய் சென்னைக்கு நேற்று திரண்டு வந்தனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை முதலே ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் அதிகம் இருந்தது.

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். குடும்பம், குடும்பமாகவும் பலர் வந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஜெயலலிதா சமாதி முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் தடுப்புவேலிகளை அமைத்து அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் வரிசையில் அனுமதித்தனர்.

ஜெயலலிதா சமாதியை பார்த்தவுடன் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. “உங்களை விட்டால், யாரு அம்மா எங்களுக்கு ஆதரவு”, “உங்கள் பிள்ளைகளை இப்படி தவிக்கவிட்டு போய்விட்டீர்களே அம்மா” என்று ஏக்கத்துடன் பலர் கதறி அழுதனர்.

ஜெயலலிதா சமாதியை பார்த்த சிலர் துக்கம் தாங்காமல் மயங்கினர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வேன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராமங்களில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க. மகளிரணியினர் ஜெயலலிதா சமாதி அருகே ஒப்பாரி வைத்தனர். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையிலும் பலர் ஈடுபட்டனர்.

அஞ்சலி செலுத்துவதற்கு வந்தவர்கள் பூக்கள், மாலைகளை அவரது சமாதியில் தூவினர். இதன் காரணமாக அவரது சமாதியின் மேல் மலை போன்று பூக்களும், மாலைகளும் குவிய தொடங்கின. இதையடுத்து பெண் ஊழியர்கள் அவ்வப்போது அவரது சமாதியில் போடப்பட்ட பூக்கள், மாலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அ.தி.மு.க.வினர் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். கோவில்களில் பால் குடம் எடுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்ற பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்பினால் தலைமுடியை காணிக்கை அளிப்பதாகவும் பலர் வேண்டி இருந்தனர்.

ஆனால் அவர்களுடைய வேண்டுதலுக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது. இதையடுத்து ஜெயலலிதா சமாதியில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க.வினர் நேற்று வந்தனர்.

ஜெயலலிதா சமாதியில் 20 அடி தொலைவில் வரிசையாக அமர்ந்து மொட்டை போட்டுக்கொண்டனர். பெண் தொண்டர் ஒருவரும் மொட்டை போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மொட்டை அடித்த அ.தி.மு.க.வினர் கூறும்போது, ‘முதல்-அமைச்சர் அம்மாவை (ஜெயலலிதா) கட்சி தலைவர் என்பதை மீறியும், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து வாழ்ந்து வருகிறோம். எனவே மொட்டை அடித்து எங்களுடைய துக்கத்தையும், அஞ்சலியை செலுத்தி உள்ளோம்’ என்றனர்.

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியவுடன், அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதியிலும் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

ஜெயலலிதாவின் சமாதியை பலர் செல்போன்களில் படம் எடுத்தனர். சமாதி முன்பு நின்று செல்பியும் எடுத்தனர்.

ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்த வந்ததால் மெரினா கடற்கரை சாலை நேற்று பரபரப்புடன் இருந்தது. பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.