தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை அனைத்து பிரிவு திருச்சபை தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் விழாவிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் வருகிற 20-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
அனைத்து மதத் தலைவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக இது நடத்தப்படுகிறது.
விழா தொடங்கியதும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாடும் அதனை தொடர்ந்து ‘நிவர்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி கூறி சிறப்புரையாற்றுகிறார். நலத்திட்ட உதவிகளையும் முன்னின்று வழங்குகிறார்.
விழாவில் சென்னை, மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அய்யூப், தருமமிகு சற்குரு பாலயோகி சுவாமிகள் திருமடம், குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், முன்னாள் எம்.பி.பீட்டர் அல்போன்ஸ், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் தேவசகாயம், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி, பெந்தகோஸ்தே திருச்சபை பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப், தமிழ்சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனைவரையும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் வரவேற்கிறார்.
தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு ரோஸ் நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியை காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்கள்.
அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சென்னை சாந்தோமில் நடைபெறும் விழாவில் காணொலி வாயிலாக நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.