யாழில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா! – வவுனியாவில் இருவர்

259 0

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, யாழப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கே கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால், மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் நாளை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத் தலைவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதிலேயே ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா சாலம்பைக் குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து கடந்த வாரம் வவுனியாவுக்குச் சென்றிருந்ததுடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு, சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.