2020ல் கார்பன் உமிழ்வு 7 சதவீதம் குறைந்தது -ஆய்வு முடிவு

253 0

கொரோனாவால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு கார்பன் உமிழ்வு 7 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. இதனை பல ஆய்வுகள் கூறி உள்ளன.
இந்நிலையில், உலகளாவிய கார்பன் உமிழ்வு குறித்து குளோபல் கார்பன் திட்டம் தனது ஆய்வு முடிவு மற்றும் மதிப்பீடுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்ததால், 2020 ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு 7 சதவீதம் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் தொழில்துறையிலிருந்து உமிழ்வு 34 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குழு கூறியுள்ளது.
கார்பன் உமிழ்வை பொருத்தவரை அமெரிக்காவில் 12 சதவிகிதம் குறைந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது.  சீனாவில் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், 2020ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு வெறும் 1.7 சதவிகிதம் மட்டுமே குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் கார்பன் உமிழ்வு குறைந்ததில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் கார் பயணங்களினால் ஏற்படும் உமிழ்வு ஏறக்குறைய பாதியாக குறைந்தாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.