இந்தியா-சீனா இடையே நல்ல உறவுகளை பேணுவதற்கு பொதுவான முயற்சிகள் தேவை என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையேயான அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இருநாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளை குவித்துள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று நடத்திய கலந்துரையாடலில் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே நிலவும் பதற்றம் குறித்தும் பேசினார்.
அப்போது அவர், எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அதிக அளவிலான படைகளை குவித்ததற்கு 5 மாறுபட்ட விளக்கங்களை சீனா கூறியுள்ளது என்றும், இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளதால் இருநாட்டு உறவில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்கு சீனா நேற்று பதிலளித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறியதாவது:-
இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய 2 வளர்ந்து வரும் சந்தைகளாகும். இரு நாடுகளும் நல்ல உறவுகளை பேணுவது இருநாடுகளின் அடிப்படை நலன்களுக்கும், அதன் மக்களுக்கும் நல்லது. ஆனால் இந்த உறவுகளுக்கு இரு தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் தேவை.
எல்லைப்பகுதி நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது இதன் மொத்த பொறுப்பும் இந்தியாவை சார்ந்தது. இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா கடுமையாக பின்பற்றுகிறது. மேலும் எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணவும், பிராந்தியத்தில் அமைதியை கட்டமைக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம் எங்கள் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எனவே இந்திய தரப்பில், அது எதை பிரதிபலிக்க வேண்டும்? என்பது ஒரு தீவிரமான கேள்வியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இரு தரப்பு உறவுகளில் சவால்கள் இருக்கலாம். ஆனால் இந்தியா விவகாரத்தில் சீனாவின் கொள்கையும், நிலைப்பாடும் அப்படியே இருக்கிறது.
இவ்வாறு ஹுவா சுனியிங் தெரிவித்தார்.