இலங்கையில் பக்கச்சார்பான நீதியே பேணப்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீதியே இந்த நாட்டின் எல்லா மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பாகும். நீதியானது தவிர்க்கமுடியாத வகையில், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வுடனும் எதிர்காலத்துடனும் பிணைந்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொடூரமாகவும் இரக்கம் இன்றியும் கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தமக்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். தமது சமூகத்தை சார்ந்த ஒருவர் நீதிக்கு அமைச்சராக இருக்கின்றபோதிலும் முஸ்லிம்கள் தமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். 2010 ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. உடல், உள, புத்தி ரீதியாகவும் தாற்காலிகமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமாதானத்தை அடைவதற்கான முதல் படி அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதாகும். இந்த சந்தர்ப்பத்தில் 1972 ஆம் ஆண்டு 6 ஆவது போப்பாண்டவர் போல் உலக சமாதான தினம் அன்று கூறிய ஒரு பிரபல்யமான கூற்றை இங்கு கூறுவது பொருத்தமானது.
” மனிதனுக்கான உண்மையான மரியாதையின் நிமித்தம் காரணமாக அமையாத சமாதானம் உண்மையான சமாதானம் அல்ல. மனிதனுக்கான நேர்மையான இந்த உணர்வை நாம் எப்படி அழைக்கின்றோம் ? இதை நாம் ‘நீதி’ என்று அழைக்கின்றோம். உனக்கு சமாதானம் வேண்டுமானால், நீதிக்காக உழை” என்று அவர் கூறினார்.
இன்றைய அரசாங்கம் சமாதானத்தை அடைவதற்கும் அதனால் நீதிக்காக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறதா?
இலங்கைக்குள் உங்களின் சக பிரஜைகளான சுதேச தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு உண்மையான கரிசனை உணர்வு இருக்குமானால் அவர்களின் நிலங்களை அபகரிக்க மாட்டீர்கள். எமது கலாசார சின்னங்களை அழிக்க மாட்டீர்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிங்கள இராணுவத்தை வைத்திருக்கமாட்டீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நலிந்தவர்கள் மீதும் உணர்வு இருக்குமானால் அவர்களிடம் இருந்து அபகரிக்கமாட்டீர்கள். மாறாக, அவர்களுக்கு கொடுத்து உதவிசெய்து ஆறுதல் கூறுவீர்கள். ஆனால், நீங்கள் எமது நிலங்கள், எமது பாரம்பரிய வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் எம்மை தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்.
அப்பாவிகள் பக்கமாக அன்றி தவறிழைப்பவர்கள் பக்கமாகவே இந்த நாட்டில் நாம் செயற்படுவதை நீதி தொடர்பாக பேசுகின்றபோது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1956, 1958,1961,1977,1981 மற்றும் 1983 ஆண்டு இனக்கலவரங்களின்போது கொலைகள், சித்திரவதைகள், தீவைப்பு மற்றும் பாலியல்வல்லுறவுகளில் ஈடுபட்ட ஒருவரையேனும் நாம் தண்டித்திருக்கிறோமா? 97,000 நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ஒருவரையாவது தண்டித்திருக்கிறோமா? அப்போது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமாக அது திகழ்ந்தது. அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரையாவது தண்டித்திருக்கிறோமா? ஆகக்குறைந்தது இந்த விடயங்களில் பொறுப்புக்கூறலுக்காவது முயற்சித்திருக்கிறோமா? தொடர்ந்துவந்த அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அமுல்படுத்தி இருக்கிறோமா? இவை எல்லாமே வசதியாக தட்டுக்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான நீதி ( inclusive justice ) என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே ( selective justice) காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.
இங்கு ஒரு புதுமையான அரசியல் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கொடுக்கபப்டுகின்றன. இதன் தாக்கத்தை இந்த சபையிலும் உணர முடிகின்றது. அதனால் தான் படித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமுகம் பற்றியும் அரசாங்கம் பற்றியும் உண்மைகளை பேசும்போது கூச்சல் போட்டு குழப்புகிறார்கள்.
இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக காணப்படுவது முழுமையான ஒரு இனவாதமாகும் (Systemic Racism). அரச நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஊடாக இது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த இனவாதம் என்பது ஒரு சித்தாந்தம் (Ideology) ஆகியுள்ளது. இந்த சபையில் முறைகேடாக நடக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சித்தாந்தத்தை காவுகிறார்கள். இனவாதத்தை விதைக்கும் கருவிகளாக ஊடகங்களும் மாறிவிட்டன. இந்த இனவாதம் எம்மை எங்கேயும் கொண்டுசெல்லப்போவதில்லை. இது இந்த நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பெரும் குந்தகத்தையும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவையும் ஏற்படுத்தப்போகின்றது.
இன்றைய விவாதம் நீதி அமைச்சு பற்றியது என்பதால், நிதி அமைச்சின் இணையத் தளத்துக்கு சென்று பார்த்தேன். அதில் பூகோள முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக சமூகங்களின் தேவைககளை பூர்த்திசெய்யும் வகையில் சட்ட மறுசீரமைப்பு செய்தல்” இந்த அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த நோக்கத்தை முன்னெடுக்கிறோமா ? இந்த நாட்டில் நீதியுடன் சம்பந்தமான எல்லா விடயங்களுமே உலக நடப்புக்கள், உலக நியதிகள், ஒழுக்க எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றில் இருந்து முரண்பட்டு செல்வதே யதார்த்தமாக இருக்கிறது. தனி மனித உரிமைகள், சமூகங்களின் கூட்டு உரிமைகள், நல்லிணக்கம் , சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகளை முன்னிலைப்படுத்தி நாகரிகத்தின் வளர்ச்சிப்பாதையில் எவ்வாறு முன்னேறிச்செல்லலாம் என்று சிந்தித்து அவற்றுக்கு ஏற்ப தமது பாராளுமன்றங்களில் சட்டங்களை இயற்றி உலக நாடுகள் பயணம் செய்கையில் இந்த பண்புகளுக்கு முரணாக அல்லவா இந்த நாடு பயணம் செய்கின்றது? குறிப்பிட்ட ஒரு சமுகத்தை சார்ந்த மக்களின் நிலங்களை பறிப்பதுடன் அவர்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளை இல்லாமல் செய்வதற்கு முயலுகின்றது. சிங்கள பௌத்த தொல்பொருள் எச்சங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் எமது சமூகத்தின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பௌத்த எச்சங்கள் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த புராதன எச்சங்கள் தமிழ் பௌத்த காலத்தில் இருந்தானவை. சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரேயே தமிழ் மக்கள் பௌத்தத்தை தழுவியிருந்தனர். தமிழ் பௌத்தர்கள் காலத்தில் இருந்தான எச்சங்களை நீங்கள் பேணி பாதுகாக்க விரும்பினால் இந்த ஆணைக்குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் அணையாளர்களாகவே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கவா முயலுகிறீர்கள்? இதுவா இந்த ஆணைக்குழுக்களின் நோக்கம் ? 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இணக்கம் மற்றும் இசைவு இன்றி எந்த ஒரு செயற்பாடும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.
சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் சர்வதேச சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்துநின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். 18 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய நாட்டின் இறைமையை பாதுகாக்கும் கோட்பாடு இன்று பொருத்தம் அற்றதாகி வலுவிழந்துவிட்டது. ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும்போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும், எந்த ஒரு போர்க்குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும் கூறுகிறீர்கள். இது உண்மையானால், இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் கூறவேண்டும். ஆனால், இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாக கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகிறார்கள். நீங்கள் அந்த மக்களை உண்மையாக மீட்டு அவர்களுக்கு வாழ்வு அளித்திருந்தால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின் வந்த சகல தேர்தல்களிலும் உங்களையல்லவா அவர்கள் ஆதரித்திருந்திருப்பார்கள்? ஆனால், தங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று நீங்கள் இன்றும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லவா மக்கள் தேர்தல்களில் பல தடவைகள் வெல்ல வைத்துள்ளார்கள் ? எவ்வாறு 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற வட மாகாண சபை தேத்தலில் வட மாகாணத்தின் ஆகக்கூடுதல் சாதனை வாக்குகளாக 133,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர்?
விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும்.
ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. அதனால் தான் சர்வதேச விசாரணையை முகம்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை இழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.
அடுத்தவருடம் மார்ச் மாதம் நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்கின்றோம். சர்வதேச சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மார்ச் மாத நடுப்பகுதி தொலைவில் இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தப்புவதற்கு சிறிய சந்தர்ப்பமே உள்ளது.
ஆனால் ஒரு வழி உண்டு. அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருகின்றது. இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியல் அமைப்பை தயாரித்து நிறைவேற்றுங்கள். உங்கள் அரசாங்கம் மட்டுமே இதை செய்ய முடியும். பெரும்பான்மை சமூகத்துடன் சமத்துவம் மற்றும் சக வாழ்வுடன் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களும் கூட வாழும்வகையில் உண்மையான அதிகார பகிர்வை ராஜபக்ஸ குடும்பம் உறுதிசெய்யட்டும்.
நீங்கள் தவறினால், யுத்தம் நடைபெற்றபோது பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி இறங்கியதுபோல மீண்டும் ஏறி இறங்குவீர்கள். இந்த நாட்டில் இந முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி சர்வதேச வல்லரசுகள் காலூன்றுவதற்கு (இதுவரை அப்படி செய்திருக்கவில்லை என்றால்) இடமளிக்காதீர்கள் என்று இந்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.