இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை-சுமந்திரன்

442 0

இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன. நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்றபோது, நீதி அமைச்சர் ருவிட்டர் மூலமாக கருத்துக்களைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும். சிறைச்சாலைகளில் 1983, 2000 மற் றும் 2012 ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத்நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட கடத்தப்பட்டுக் காணமால் ஆக்கப்பட்ட சம்பவம்,34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு இன்னமும் நீதி நிலை நாட்டப்படாதது ஏன்?

நாட்டில் மோசமான, சர்வதேச குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே சர்வதேச விசாரணைகளைக்கேட்கின்றோம். அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது.” என்றுள்ளார்.