சேலம்-சென்னை 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டப்பேரவையிலேயே ‘8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை’ என்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம். ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது. மனசாட்சி இருந்தால் 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முனையக்கூடாது.
விவசாயிகளிடம் இருந்து அடித்துப் பிடுங்கிய இடங்களை எல்லாம் எந்த தாமதமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பெயருக்கு உடனடியாக மாற்றிக் கொடுக்கவேண்டும். அப்படி செய்யாமல் 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.