எகிப்து: பண்டைய கால உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்று புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

251 0

எகிப்து நாட்டில் பண்டைய காலை உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்று புகைப்படம் எடுத்த மாடல் அழகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபலநபராக இருந்துவந்தார்.
இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீட்டுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார்.
தனது புகைப்படக்கலைஞருடன் பிரமீட்டுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அவர் அங்கு எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீட்டு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.
சமூகவலைதளங்களில் சல்மாவின் புகைப்படங்கள் வைரலான சிலமணி நேரத்திலேயே அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வரலாற்று சின்னமான பிரமீடு பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தது, சர்ச்சைக்குரிய வகையிலான உடையில் பிரமீடு பகுதிக்கு சென்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக சல்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சல்மாவை எகிப்தின் பண்டைய உடையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சல்மா மற்றும் அவரது புகைப்பட கலைஞர் இருவருமே பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நடந்த விசாரணைக்கு பின்னர் இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
எகிப்து பிரமீடு பகுதியில் பண்டையகால உடையுடன் மாடல் அழகி சல்மா போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.