அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தனது தலவாக்கலை காரியாலயத்தில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த 70 வருட காலமாக பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வந்த போதிலும் தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்கிய தொழிற்சங்கங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே செயற்பட்டன.
எனது தந்தையும் மாபெரும் தொழிற்சங்கவாதியுமாகிய அமரர் சந்திரசேகரன் மலையகத் தொழிலாளர் முன்னணியை தோற்றுவித்ததே தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்குவதற்கே ஆகும். 1994-2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 35,000க்கும் மேற்பட்ட தனி வீடுகளையும் தோட்டங்கள் தோறும் மின்சாரம், குடிநீர் வசதி என ஒவ்வொரு மலையகத்தவரும் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தார்.
ஆனால் அமரர் சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர் முன்னணியின் நிலை குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது.
தேர்தல் காலங்களிலும் தொழிற்சங்க சந்தாவை பெறும் ஜூன், டிசம்பர் மாதங்கள் தவிர்த்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத, தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத இது போன்ற தொழிற்சங்கங்களை விமர்சித்து விமர்சித்து காலத்தைக் கடத்துவதை விட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட எம் தொழிலாளர்களுடன் ஒன்றிப் பயணிக்கும் ஒரு தொழிற்சங்கமாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியை நடத்திச் செல்வதே ஒரு தலைவராக நாம் அமரர் சந்திரசேகரனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
எனது சேவைகள் அனைத்தும் சகல தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாக அமையும். இதற்காக பல வேலைத்திட்டங்களை வடிவமைத்துள்ளேன். இதன் ஓர் அம்சமாக என் அமைப்பு சார்ந்த அங்கத்தவர்களைக் காப்புறுதி செய்யும் திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளேன்.
விபத்துகளினால் குறிப்பாக தொழில் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் விபத்துகளுக்கு எமது தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமோ அல்லது காப்பீடோ கிடைப்பதில்லை என்பது தொடர்ச்சியாகத் தொடரும் அவலமாகும்.
ஆகவே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் ஆரம்பக் கட்டமாக எமது தொழிற்சங்கத்தில் உறுப்புரிமை பெற்று அங்கத்துவம் வகிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்புறுதியைப் பேணுவது கட்டாயமாக்கப்படும்.
இயற்கையுடன் போராடி தொழில் செய்யும் போது ஏற்படும் விபத்துகள், உயிர் அச்சுறுத்தல்கள் தவிர்க்க முடியாது என்றாலும் அதன் பின்னர் எமது அங்கத்தவர்கள பின்னடைவைச் சந்திக்காது முன்னோக்கிச் செல்வதற்கான ஓர் உந்துசக்தியாக செயற்படவே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.
இதுவரை காலமும் பெருந்தோட்டத்துறையில் இவ்வாறு ஏற்பட்ட மரணங்களும் விபத்துகளும் வெறுமனே அனுதாபம் தெரிவிப்பதோடு மாத்திரமே முற்றுப்பெற்று விட்டன. இனியும் இது போன்ற மரணங்களும் விபத்துகளும் அவலங்களாக தொடரக் கூடாது.
இதைப்போன்றே தீ விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர் குடியிருப்புகளையும் காப்புறுதி செய்வது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.