2021ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த வருடத்தின் முதலாவது அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் விடயம் என்ன என்பது தொடர்பில் மீண்டும் ஒருமுறை நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி முடிவெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய 18 ஆகக் காணப்படும் குறித்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கப்படவிருப்பதுடன், ஆளும் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் எதிர்க்கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.