மழை வெள்ளம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

324 0

மழை வெள்ளம் தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார்.

யாழில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் பல்வேறுப்பட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலர் வெள்ளங்களின் ஊடாக நடந்து செல்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் என்றும் சேறுகளினால் புண்கள் ஏற்படலாம் என்பதால், அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளங்களில் தேங்கியுள்ள கழிவு பொருட்கள் உள்ளிட்டவற்றால் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய ஆபத்து உள்ளதால், சளி, காய்ச்சல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தாக்கங்களும் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர் நிலைகள், குளங்கள், கிணறுகளில் நீர் மட்டம் அதிகமாக காணப்படுவதனால் அவை தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தவறி விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்கும் முகமாக அவை தொடர்பிலான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை மழை காலங்களில் விபத்துக்கள் ஏற்பட ஏதுவான காரணிகள் காணப்படுவதனால் வாகனங்களை செலுத்தும் போதும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.