மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை

333 0

sumanarathnatheroமட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது.

அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றில் முன்னிலயாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு நேற்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையால் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி சுமணரத்ன தேரர் தனது தொண்டர்களைத் திரட்டி வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார். விஹாராதிபதியின் இந்த நடவடிக்கையால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

பொதுபலசேனா அமைப்பினர் புணானைப் பகுதியில் நெடுஞ்சாலையிலும் புகையிரதப் பாதையிலும் அமர்ந்து கொண்டு வீதி மற்றும் புகையிரதப் போக்குவரத்தையும் தடை செய்தனர். இதன் பின்னர் பொலிஸார், மங்களராம விஹாராதிபதிக்கெதிராக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதனைப் பரிசீலித்த நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தின் அழைப்பாணை நேற்று சுமணரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.