நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு-ஜனாதிபதி

328 0

janathipathyநாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக கூறினார்.

அனைத்து மதங்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, அரசாங்கம்; மேற்கொள்ளும் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக செயற்படும் முழுநேர விசேட செயற்குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இக்குழுவானது பௌத்த சாசன அமைச்சு, இந்து மத விவகார அமைச்சு, கிறிஸ்தவ விவகார அமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களால் முன்மொழியப்படும் விசேட பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துப்படுத்தி மதத் தலைவர்கள் மற்றும் பௌத்த மத அமைப்புக்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டதுடன், மதங்களுக்கிடையிலான சபை மூலம் குறித்த முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் மத ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் போது நடவடிக்கையெடுப்பதற்காக அனைத்து மத தலைவர்களாலும் பெயரிடப்படும் விசேட பிரதிநிதிகளை உள்ளடக்கிய அணியொன்றை நியமிப்பதற்கும் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.