கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு உப்பளத்தின் அடையாளத்தை அளிக்காதே, உப்புக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க வேண்டாம், கூட்டாக உழைப்போம் – தனியார் மயமாக்கலை எதிர்ப்போம், எங்கள் வளத்தில் நாங்கள் வாழ்வோம், எங்கள் வளங்களைத் தனியாருக்கு விற்க அனுமதிக்கோம், பிரதேச வளங்களில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை, இது எங்கள் உப்பளம், உப்பளத்தை விற்காதே, நம் உழைப்பை அழிக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளயும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் அமைப்புகளால் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், நிதி அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர் றிசாட்பதியூதீன், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைத்ததுடன் கண்டாவளை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ம.பிரதீப் மற்றும் ஆனையிறவு உப்பள முகாமையார் ஏ.கிசோதரன் ஆகியோருக்கு நேரடியாகவும் கையளித்துள்ளனர்.
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவது என்பது இந்த பிரதேச மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உப்பளங்கள் தனியார் மயமாக்கும் முயற்சி கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.