வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கடந்த யூன் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை 4 ஆர்பிஜி எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையிலேயே சிறிதரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட, 4 ஆர்பிஜி எறிகணைக் குண்டுகள் புதியவை போன்று காணப்படுவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,
அதனால் இவை தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்ற படையினரின் தகவல்களை நம்பமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம், பொலிஸார் மற்றும் உளவுப் படையினர் இணைந்தே இவ்வாறான குண்டுகளை வைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர்,
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும், தமிழருடைய நிலங்களை மெல்ல மெல்ல கபளீகரம் செய்வதற்கும் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான தந்திரத்தின் வடிவமே, கைக்குண்டுகள், ஷெல்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்படுவதாகவும், 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதிக்குப் பின்னர் விடுதலைப் புலிகளினால் எந்தவொரு துப்பாக்கி வெடிச் சத்தத்தையும் கேட்கவில்லை என்றும் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்னர், எந்தவொரு யுத்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு சம்பவங்களும் அரசாங்கத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், மிக மிக ஆபத்தான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான குண்டுகளை மீட்பது போன்ற பாசாங்கு காட்டும் முயற்சிகள், தமிழர்களை வேறோடு அழிப்பதற்கான முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் குண்டுகள், ஷெல்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்படுவதாக புதிய புதிய செய்திகள் உருவாகிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் தமிழர் பிரதேசங்களில் தேவை என்பதற்காக புதிது புதிதாக குண்டுகளை வைப்பதும் எடுப்பதுமாக உள்ளதாகவும், குறிப்பாக தனது காரியாலத்திலுள்ள அறைக்குள் குண்டுகளை வைத்துவிட்டு எடுத்தார்கள் என்றும் இவற்றை தட்டிக்கேட்பதற்கு யாரும் இல்லாத காலமாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இராணுவம், பொலிஸார் மற்றும் உளவுப்படை இணைந்து இவ்வாறான காரியங்களை மேற்கொள்வதாகவும், ஒருவரைக் கொண்டு குண்டுகளை வைத்து ஒருவரைக் கொண்டு எடுப்பது போன்று பாசாங்கு செய்வதில் இராணுவத்திற்கு நிகர் அவர்களே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை 26 ஆம் திகதி கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 4 ஆர்பிஜி குண்டுகள், பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 4 ஆர்பிஜி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர் குண்டுகளை 57 ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இரைக்கும் பணியில் ஈடுபட்டபோது ஒரு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கிளிநொச்சி இரத்தினபுரம் 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர் குண்டுகளை இராணுவத்தின் 57 ஆம் படைப்பிரிவினர் ன் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.