நுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள நான்கு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ குயினா தோட்டத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 28 ம் திகதி அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனையவர்கள் மற்றும் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானதை தொடர்ந்ததே குறித்த தொற்று பரவியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேரும், பொகவந்தலாவ நகரில் வெற்றிலை விற்பனையில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
இவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வெற்றிலை வியாபாரியிடம் பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெற்றிலை வாங்கி சென்றுள்ளதாக சுகாதார தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
இது குறித்து நோர்வூட் நகர சபையின் தவைர் கே.கே.குழந்தைவேல் கருத்து தெரிவிக்கையில் “கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டத்தின் குடியிருப்புக்களுக்கும், குறித்த வெற்றிலை கடை பிரதேசதிற்கும் தொற்று நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், பொகவந்தலாவையில் இதற்கு முன் 14 கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இப்பிரதேசம் முடக்குவதா? இல்லையா என்பது தொடர்பாக சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதியில் சுமார் 735 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எவருக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக இவர்கள் முறையாக தனிமைப்படுத்தும் சட்டங்களை கடைப்பிடிக்காது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செல்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.
முதல் கொரோனா அலை வரும்போது இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ள போதிலும் இதுவரை அவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை என பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதன் மூலமும் இவர்கள் தனிமைப்படுத்தும் சட்டங்களை முறையாக கடைபிடிக்கச் செய்வதன் மூலமும் தொற்றுப்பரவுவதை தடுக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.