சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது.
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணக்க நிகழ்விற்காக தாயார் செய்யப்பட்ட பாதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி வணக்கம் செலுத்த்தப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காக…
ஈழத்தமிழர் உரிமைக்காக…
தமிழர்களின் வாழ்வுரிமைக்காக…
ஓங்கி ஒலித்த சிம்மக்குரல்
ஓய்ந்தது…!
மீளாத் துயருடன்…
ஈழத்தமிழ் மக்கள்!
என்ற வாசகத்துடன் முதல்வர் படம் பொறித்து தாயர் செய்யப்பட்ட பதாகை வைக்கப்பட்டு வாழை மரங்கள் கட்டியும் தோரணங்கள் தொங்கவிட்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
சோக கீதம் பின்னணியில் ஒலிக்க மாலை 4:30 மணிக்கு பிரத்தியேகமாக தாயர் செய்யப்பட்டிருந்த பொதுச்சுடர் ஏற்றலுடன் வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை ஈழத்தமிழ் மூத்தவர் ஒருவர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. கே.கே.நகர் காவல் ஆய்வாளர் மற்றும் ஈழத்தமிழர் ஒருவரும் ஈகைச் சுடரை ஏற்றினர். கே.கே.நகர் காவல் ஆய்வாளர் மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து கூடியிருந்த ஈழத்தமிழர்கள் வரிசையாக வந்து மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.
நிகழ்விடத்தில் தனியே தாயர் செய்து வைக்கப்பட்டிருந்த பதாகையில் வணக்க நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் தமது கையெழுத்தை இட்டுச்சென்றார்கள். நூற்றிற்கு மேலான ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.
இரவு 9 மணிவரை வீதியால் சென்ற பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி வணக்கம் செலுத்தியதுடன் கையொப்பமிட்டுச் சென்றார்கள். இவ்வாறு வந்தவர்களில் பலர் தமிழ்நாட்டு முதல்வருக்கு வணக்கம் செலுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு பெரும் ஆறுதலடைந்ததை அவதானிக்க முடிந்தது. சிலர் நேரடியாகவும் கூறிச் சென்றார்கள்.
காலை முதல் மாலை வரை ஈழத்தமிழ் இளைஞர்கள் ஈடுபாட்டுடன் நிகழ்வு ஏற்பாடுகளை செய்ததுடன் சிறப்பான முறையில் வணக்க நிகழ்வினை ஒழுங்கமைத்து நடத்தியமை குறித்தும் அப்பகுதி மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
ஒரு படத்தை வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் தமிழக மரபிற்கு மாறுபட்ட முறையில் ஈழத்தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் தமிழ்நாட்டு முதல்வருக்கு வணக்க நிகழ்வை நடத்தியமை குறித்து அங்கு வந்திருந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து இரா.மயூதரன்.