மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜினி வீரவத்தன தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்றை நாம் இன்று ஸ்தாபித்துள்ளோம்.
அவர்கள் இந்த விடயம் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் முழுமையான அறிக்கையையும் ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும் வழங்கவுள்ளார்கள்.
பொலிஸ்மா அதிபர் ஊடாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். நாம் விசாரணைகளை மேற்கொண்டு, விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம்.
சிறைச்சாலைகளின் கைதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளவும் அரசாங்கம் முடிந்தளவிலான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.