கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அக்கரைப்பற்றில் இன்றுவரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில், அக்கரைப்பற்றை ஒரு உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும் கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதிவரை கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அம்பாறையில் 1361 பேரும் மட்டக்களப்பில் 5287 பேரும் திருகோணமலையில் 1249 பேரும் கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருந்தபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதார துறையினர், பொலிசார், இராணுவத்தினர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளை பேணுவதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என மேலும் தெரிவித்தார்.