திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி- சுப்பராயன் எம்பி குற்றச்சாட்டு

309 0

தமிழகத்தில் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்து சித்து விளையாட்டுகளிலும் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது என்று சுப்பராயன் எம்பி கூறியுள்ளார்.

திருப்பூர் தொகுதி எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினருமான சுப்பராயன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய பாரதீய ஜனதா அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களும் மறைமுகமாக பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையால் தான் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்து சித்து விளையாட்டுகளிலும் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது. அதில் ஒன்று தான் வேல் யாத்திரை. இந்த யாத்திரை அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாராளுமன்ற தேர்தலை போல சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணிக்கு படுதோல்வியே கிடைக்கும். தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.